பங்குசந்தையை கற்றுக் கொள்ள தொலைக்காட்சி பார்க்கிறீர்களா?

1021
0
SHARE

பங்குசந்தையைக் கற்றுக் கொள்ள பலர் ஆர்வமாக இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. ஆனால் சிலர் ஆர்வக் கோளாறாக இருந்து ஏமாறும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது, கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் பலர் தவறான ஆட்களை அணுகி பணத்தை இழக்கும் நிலை தொடர்கிறது. குறிப்பாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பங்குசந்தை தொடர்பான நிகழ்ச்சிகளை பார்க்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பங்குசந்தை தொடர்பான நிகழ்ச்சிகள் பெரும்பாலும் விளம்பரதாரர் நிகழ்ச்சிகளே. அதாவது லேகியம் விற்பது, சென்னைக்கு பக்கத்தில் சேலத்தில் இருக்கும் வீட்டு மனையை விற்கும் ரியல் எஸ்டேட் விளம்பரம், ஆண்மை குறைவு, மூலம், பௌத்திரம் சிகிச்சைக்கு விளம்பரம் செய்யும் ஆட்களைப் போன்றவர்கள் தான் பங்குசந்தை தொடர்பான நிகழ்ச்சி வழங்குபவர்களும்.

தொலைக்காட்சியில் அரை மணி நேரம் நிகழ்ச்சியில் பங்கு பெற கட்டணம் ரூ.20,000/- அளவில் இருக்கும். நீங்கள் நினைத்தாலும் அந்த கட்டணத்தை செலுத்தி அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறலாம். பொதுவாக மக்களிடையே தொலைக்காட்சியில் தோன்றுபவர்கள் பிரபலமானவர்கள் என்றும், வல்லுனர்கள் என்றும் நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல. அது ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சி. யார் வேண்டுமென்றாலும் பணம் கொடுத்து பங்கு பெற முடியும்.

பங்குசந்தை தொடர்பான எல்லா நிகழ்ச்சிகளும் விளம்பரதாரர் நிகழ்ச்சி இல்லை. சில நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினர்களை வரவழைத்து நடத்தப்படுகிறது. நீங்கள் விளம்பரதார் நிகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் தப்பிக்க முடியும். விளம்பரதாரர் நிகழ்ச்சியில் நாம் ஏதாவது சந்தேகம் கேட்டால் எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். சிறப்பு விருந்தினர்களை அழைத்து வரும் நிகழ்ச்சியில் அப்படி கூற மாட்டார்கள். உங்கள் சந்தேகங்களை தெளிவு படுத்துவார்கள். அதனால் விளம்பரதாரர் நிகழ்ச்சிகளை இனம் கண்டு அதைப் பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். குறிப்பாக வாரம் முழுவதும் கமாடிட்டி சந்தை தொடர்பான நிகழ்ச்சி, விளம்பரதாரர் நிகழ்ச்சியாகவே உள்ளது. அதனால் அதை தவிர்த்து விடுவது நல்லது.

இது மட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கற்றுக் கொள்ளும் போது குழப்பம் ஏற்படும் நிலையே உள்ளது. காரணம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நபர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பதால் அவரவர் கருத்தை முன் வைப்பதால் உங்களுக்கு எது சரி எது தவறு என்பதில் குழப்பம் ஏற்படும். ஏனென்றால் ஒருத்தர் நட்டத்தடுப்பு போட வேண்டும் என்று சொல்வார், ஒருவர் நட்டத்தடுப்பு போடக்கூடாது என்று சொல்வார். ஒருவர் டெக்னிக்கல் பின்பற்ற வேண்டும் என்பார், ஒருவர் ஃபண்டமெண்டல் பின்பற்ற வேண்டுமென்பார். ஒருவர் லாபத்தை புக் செய்யவேண்டும் என்று சொல்வார். ஒருவர் லாபத்தை புக் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று சொல்வார். மொத்தத்தில் அனைவர் சொல்வதையும் கேட்டு முதலீடு அல்லது வர்த்தகம் செய்து பணத்தை இழப்பது நீங்கள் தான்.

இறுதியாக நான் சொல்வது இதுதான். சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை பார்ப்பது தப்பில்லை. ஆனால் அனைத்து நாட்களிலும் பார்க்காமல் ஒருவரை மட்டுமே தேர்வு செய்து அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை மட்டும் பார்த்தீர்களேயானால் உங்களுக்கு சிலவற்றைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. மாறாக அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்தீர்கள் என்றால் நீங்கள் கற்றுக் கொள்ள முடியாது. நட்டப்படத்தான் முடியும்.

சிலவற்றைக் கற்றுக் கொண்டு நீங்கள் வெற்றி பெற முடியுமா? கண்டிப்பாக முடியாது. ஏனென்றால் பங்குசந்தை வர்த்தகம் மற்றும் முதலீடு மனநிலை சம்பந்தப்பட்டது. இதில் வெற்றி பெறுவதற்கு என்று ஒரு மனநிலை தேவை. அந்த மனநிலையை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழங்காது என்பதுதான் உண்மை. பிறகு எப்படி பங்குசந்தை பற்றி கற்றுக் கொண்டு வெற்றிப் பெறுவது என்று நீங்கள் கேட்பீர்கள். அதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் நமது இந்த இணையதளம். நமது தளத்தில் உள்ள கட்டுரைகள், வீடியோக்கள் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் இதைப் பகிர்ந்து அவர்களும் ஏமாறாமல் இருக்க உதவுங்கள்