யூக வணிகம் (அ) எதிர்கால வணிகம் (Futures Trading) – அறிமுகம்
யூக வணிகம் வழக்காமான வணிகத்தை விட வித்தியாசமானது. அதிக ரிஸ்க் கொண்டது. பலரது பண இழப்பிற்குக் காரணாமாக இருப்பது. ஏனென்றால் இது இரு வழிப்பாதை வர்த்தகம் ஆகும். அதாவது இருமுனை கொண்ட கத்தி போன்றது. மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
யூக வணிகம் என்றால் யூகத்தின் அடிப்படையில் வர்த்தகம் செய்வது. யூகத்தின் அடிப்படையில் செயல்படும் போது வெற்றிக்கான நிகழ்தகவு 50% மட்டுமே. யூகம் என்பது இரண்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது தான். சந்தை மேலே ஏறுமா? கீழே இறங்குமா? இரண்டில் எது வேண்டுமாலும் நடக்கலாம். நாம் ஏதாவது ஒன்றை தேர்வு செய்வது தான் யூகம். மேலே செல்லும் அல்லது கீழே செல்லும் என்று யூகித்து அதனடிப்படையில் வர்த்தகம் செய்ய வேண்டி வரும்.
யூகம் எனும்போதே அங்கு தவறுகள் நடக்க வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் யூக வணிகத்தில் ஈடுபடுபவர்களின் வெற்றி சதவிகிதம் குறைவாக உள்ளது. ஏனென்றால் நான் ஏற்கனவே கூறியது போல இது இருவழிப்பாதை வர்த்தகம். எந்த வழியில் செல்லலாம் என்ற குழப்பம் வரும். சரியான வழி உங்களை வெற்றிக்கு அழைத்து செல்லும். தவறான வழி உங்களை தோல்வி அடைய வைக்கும். அதனால்தான் மிகவும் கவனமாக செல்லவேண்டும் என்று கூறுவது.
யூக வணிகம் அல்லது எதிர்கால வணிகம் என்றால் நாம் எதிர்காலத்தில் விலையானது இப்படியிருக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில் வர்த்தகம் செய்கிறோம். அதாவது இது ஜீலை மாதம். நாம் அக்டோபர் மாதம் தங்கத்தின் விலை ஏறும் என்று நினைத்தால் இப்போதே அக்டோபர் மாதத்தில் தங்கம் வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டு வைக்கலாம். நன்றாக கவனிக்கவும். நீங்கள் தங்கத்தை வாங்கவில்லை மாறாக வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டு வைக்கிறீர்கள்.
அதே போல் தங்கம் விலை இறங்கும் என்று கருதினால் நாம் விற்று வைக்கவும் முடியும். அதாவது யூக வணிகத்தில் வாங்கியும் விற்கலாம், விற்றும் வாங்கலாம். வாங்கி விற்கும் வர்த்தக முறையில் (Buy & Sell) நீங்கள் குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்றால் லாபம். விற்று வாங்கும் வர்த்தக முறையில் (Sell & Buy) நீங்கள் அதிக விலையில் விற்று குறைந்த விலையில் வாங்கினால் லாபம். அது எப்படி நம்மிடம் பொருள் இல்லாமல் விற்க முடியும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. மறுபடியும் நினைவூட்டுகிறேன். நீங்கள் பொருள்களை வாங்கவோ விற்கவோ போவதில்லை. மாறாக வாங்குகிறேன் அல்லது விற்கிறேன் என்று ஒப்பந்தம் போடுகிறீர்கள். அவ்வளவுதான்.
அதாவது, நீங்கள் வாங்கி விற்கும் வர்த்தக முறையில் நீங்கள் வாங்கும் போது ஒப்பந்தம் ஆரம்பிக்கிறது. விற்கும் போது ஒப்பந்தம் முடிவடைகிறது. விற்று வாங்கும் வர்த்தக முறையில் நீங்கள் விற்கும் போது ஒப்பந்தம் ஆரம்பிக்கிறது மறுபடியும் வாங்கும் போது ஒப்பந்தம் முடிகிறது. நீங்கள் போட்ட ஒப்பந்தம் முடியும் போது உங்கள் வர்த்தகமும் முடிகிறது. வர்த்தக முடிவில் உங்கள் வர்த்தகத்தின் அடிப்படையில் வரும் லாபம் அல்லது நட்டம் உங்கள் கணக்கில் பற்று வைக்கப்படும்.
ஒப்பந்தம் என்றால் அதில் சில விசயங்கள் கண்டிப்பாக இருக்கும். என்னென்ன விசயங்கள் என்று பார்க்கலாம். அதாவது நீங்கள் என்ன விலையில் (Price) வாங்குகிறீர்கள் அல்லது விற்கிறீர்கள். எத்தனை எண்ணிக்கையில் (Quantity or Lot Size) வாங்குகிறீர்கள் அல்லது விற்கிறீர்கள். எந்த தேதிக்குள் (Contract Date) வாங்குகிறீர்கள் அல்லது விற்கிறீர்கள்.. எவ்வளவு விளிம்புத்தொகை (Margin) கொடுக்கிறீர்கள். இந்த 4 விசயங்களையும் உள்ளடக்கியதுதான் ஒப்பந்தம். வாங்குபவரும் விற்பவரும் போட்டுக் கொள்வதுதான் ஒப்பந்தம்.
ஒப்பந்தம் என்றாலே நீங்கள் தரகர் (Broker) மூலம் தான் பண்ண முடியும். வாங்குபவரையும், விற்பவரையும் இணைக்க கண்டிப்பாக தரகர்கள் தேவை. நீங்கள் தரகர்கள் மூலமாக மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும். தரகர் மூலம் வர்த்தகம் நடக்கும் போது கண்டிப்பாக தரகுக் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
சுருக்கமாக, யூக வணிகத்தில் நாம் வாங்கி விற்கலாம். விற்றும் வாங்கலாம். இது அதிக ரிஸ்க் நிறைந்தது. மனக் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியது. ஒப்பந்த அடிப்படையில் தரகர் மூலம் வர்த்தகம் நடப்பது. மொத்தத்தில் யூக வணிகம் அல்லது எதிர்கால வணிகம் என்பது இரு வழிப்பாதையில் பயனிப்பதாகும்.
நாம் இனி மேலே சொன்ன ஒப்பந்தம், ஒப்பந்த தேதி, விளிம்புத் தொகை, லாட் சைஸ் மற்றும் தரகுக் கட்டணம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்தடுத்த பகுதிகளில் ஒவ்வொன்றாக பார்க்கலாம். இணைந்திருங்கள்.
Thanks anna
Very well explained in Tamil about Future market. Easy to understand.
thank u very much…
Nandri Anna , very good , clear and cut explanation that too in our language Tamil , who are person’s get u as their’s first mentor they are gifted.
thank u very much praveen…
Good.very rare to get these kind of explanation in Tamil.
Thanks for your effort.
thanks very much sir…
Thank you sir